என்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி?
குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தேவ சித்தத்தை அறிந்துகொள்ள இரண்டு திறவுகோல்கள் உண்டு. 1. நீங்கள் கேட்கின்ற அல்லது செய்ய நினைக்கின்ற காரியம் வேதத்தால் தடைசெய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 2. நீங்கள் கேட்கின்ற அல்லது செய்ய நினைக்கின்ற காரியம் தேவனை மகிமைப்படுத்தவும், நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் வளரவும் உதவும் என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு காரியங்களும் உண்மையாயிருந்தும், தேவன் நீங்கள் கேட்கின்ற காரியத்தைத் தரவில்லை என்றால், நீங்கள் கேட்கின்ற காரியத்தைத் தருவது தேவனுடைய சித்தமாயில்லாமல் இருக்கலாம். அல்லது ஒருவேளை நீங்கள் இன்னும் சிறிது காலம் அதிகம் காத்திருக்க வேண்டியதாயிருக்கலாம். ஒருசில சமயங்களில் தேவ சித்தத்தை அறிந்து கொள்வது கடினம். எங்கு பணிபுரிவது, எங்கு வாழ்வது, யாரைத் திருமணம் செய்வது என்பது போன்ற பல காரியங்களில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தேவன் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தேவன் அரிதாகவே அந்த அளவிற்கு நேரடியாகவும் குறிப்பிட்டும் மக்களுக்கு பதிலளிக்கின்றார். அது போன்ற காரியங்களில் நாம் தெரிந்தெடுக்க தேவன் நமக்கு அனுமதியளிக்கின்றார். ரோமர் 12:2, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்,” என்று கூறுகின்றது. பாவம் செய்வது அல்லது தேவ சித்தத்தைத் தடுப்பது என்ற ஒரு தீர்மானத்தை மட்டும் நாம் எடுக்கக் கூடாது என்று தேவன் விரும்புகின்றார். தேவ சித்தத்தோடு ஒத்துப்போகும் தெரிந்தெடுப்புகளை நாம் எடுக்க தேவன் விரும்புகின்றார். அப்படியானால் உங்களுக்கான தேவனுடைய சித்தத்தை நீங்கள் அறிந்துகொள்வது எப்படி? நீங்கள் தேவனோடு நெருங்கி நடந்து, உண்மையாகவே உங்கள் வாழ்வில் அவரது சித்தத்தை விரும்பினால், தேவன் தமது விருப்பங்களை உங்கள் இருதயத்தில் வைப்பார். உங்களது சித்தமில்லாமல், தேவ சித்தத்தை விரும்புவதே இதன் திறவுகோல். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). வேதம் அதற்கு எதிராகப் பேசாமல், உங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உண்மையாகவே பலனளிக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் இருதயத்தைப் பின்பற்றித் தீர்மானிக்க வேதாகமம் அனுமதியளிக்கிறது. நீங்கள் உண்மையாகவே தாழ்மையோடும், திறந்த மனதோடும் தேவ சித்தத்தை நாடினால், அவர் உங்களுக்கு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவார்.