top of page

இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா?


கிறிஸ்தவ உபதேசத்தில் ஒரு முக்கியமான கேள்வி இதுவாகத் தான் இருக்கக்கூடும். இந்தக் கேள்வி தான் கத்தோலிக்க திருச்சபைக்கும் ப்ராட்டஸ்ட்ன்ட் திருச்சபைகளுக்கும் பிரிவுண்டாக்கி மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தக் கேள்விக்கான பதிலே வேதாகமக் கிறிஸ்தவத்திற்கும், பல கிறிஸ்தவ கள்ள போதனைகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு. இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா? இயேசுவில் நம்பிக்கை மட்டும் வைப்பதால் நான் இரட்சிக்கப் படக்கூடுமா அல்லது இயேசுவில் நம்பிக்கை வைப்பதோடு கூட ஒரு சில காரியங்களையும் செய்யவேண்டுமா? வேதத்திலுள்ள ஒரு சில புரிந்து கொள்ளக் கடினமான வசனங்களால் இந்தக் கேள்விக்கான விடை சிக்கலானதாக உள்ளது. ரோமர் 3:28, 5:1 மற்றும் கலாத்தியர் 3:24 ஆகிய வசனங்களை யாக்கோபு 2:24 கூட ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு சிலர் பவுலுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டும்) யாக்கோபுக்கும் (இரட்சிப்பு விசுவாசத்தோடு கிரியைகளும்) இடையில் ஒரு வேறுபாட்டைக் காண்கின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுகின்றார் (எபேசியர் 2:8-9). யாக்கோபோ விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே யாக்கோபு என்ன கூறுகின்றார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதின் மூலமே இந்த வெளிப்படையான சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். ஒரு மனிதன் விசுவாசத்தைக் கொண்டிருந்து நற்கிரியை இல்லாமல் இருக்கமுடியும் என்ற தவறான நம்பிக்கையை கண்டிக்கிறார் (யாக்கோபு 2:17-18). கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான விசுவாசம் மாற்றப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற கூற்றை வலியுறுத்துகின்றார். யாக்கோபு விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறவில்லை, ஆனால் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஒருவரின் வாழ்வில் நற்கிரியைகளைக் காணமுடியும் என்று கூறுகின்றார். ஒருவர் தான் விசுவாசி என்று கூறிக்கொண்டு, அவரது வாழ்வில் நற்கிரியைகள் இல்லையென்றால் கிறிஸ்துவின் மேலுள்ள அவரது விசுவாசம் மெய்யானதாயிருக்காது (யாக்கோபு 2:14,17,20,26). பவுலும் இதே காரியத்தை தனது நிரூபங்களில் கூறுகின்றார். கலாத்தியர் 5:22-23 ல் விசுவாசிகளின் வாழ்வில் இருக்க வேண்டிய நல்ல கனிகளைப் பட்டியலிடுகின்றார். நாம் கிரியைகளினாலே அல்ல விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 2:8-9) என்று கூறிய மறுகணமே நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக படைக்கப்பட்டோம் என்று பவுல் எடுத்துரைக்கிறார் (எபேசியர் 2:10). யாக்கோபைப் போலவே பவுலும் அதே அளவு மாற்றப்பட்ட வாழ்வை எதிர்பார்க்கிறார்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). யாக்கோபும் பவுலும் இரட்சிப்பைக் குறித்த தங்களது போதனைகளில் வேறுபடவில்லை. அவர்கள் ஒரே காரியத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று எடுத்துரைக்க, யாக்கோபோ கிறிஸ்துவின் மேலுள்ள உண்மையான விசுவாசம் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.

Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page