எப்படி நான் தேவனோடு என்னை ஒப்புரவாக்குவது?
முதலாவது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி கொள்வதற்கு நம்மிடம் உள்ள தவறு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பதில் "பாவம்". நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. (சங்.14:3) "நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக கலகம் பண்ணினோம். நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்தோம் (ஏசா.53:6). நமக்கு கிடைக்கிற வேதனைதரும் செய்தி என்னவென்றால், பாவத்தின் சம்பளம் மரணம். "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசே.18:4). நற்செய்தி என்னவென்றால், நமக்கு இரட்சிப்பு கொண்டுவரும்படியாய். அவர் நம்மை தொடர்ந்து வருகிறார் என்பதே. இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே வந்தேன் என்று இயேசுகிறிஸ்து தாமே அறிக்கையிடுகிறார். (லூக். 19:10) அவர் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை "முடிந்தது". (யோ.19:30) என்று சிலுவையில் முழக்கமிடுகிறதை நம்மால் காணமுடிகிறது. நமது பாவங்களை ஒத்துக்கொள்வதுதான் தேவனோடு நமது உறவை சரிப்படுத்திக்கொள்வதற்கு முதற்படியாகும். இரண்டாவது. நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் நம் பாவங்களை அறிக்கை செய்வதும் (ஏசா.57:15) பாவத்தை விட்டுவிடுவதற்கு நாம் எடுக்கும் உறுதியுமாகும். "நீதியுண்டாக, இருதயத்தில் விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கைப்பண்ணப்படும்." (ரோ.10:10) மனந்திரும்புதல், விசுவாசத்தோடு இணைக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தியாகமான மரணம், அவரது அற்புதமான உயிர்த்தெழுதல் மேலுள்ள விசுவாசமே இயேசுவை ஒருவருக்கு இரட்சகராக மாற்றும். என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன்வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9). மேலும் பல வேதப்பகுதிகள் விசுவாசத்தின் அவசியத்தை போதிக்கிறது. யோ.20:27, அப்.16:31, கலா.2:16, 3:11, 26, எபே.2:8. தேவனோடு ஒப்புரவாகிவிட்டேன் என்பது தேவன் உனக்காக எதைச் செய்தாரோ, அதற்காக உன்னையே பிரதிபலனாக அளிப்பது என்பதாகும். அவர் இரட்சகரை அனுப்பினார். நம்முடைய பாவங்களை நீக்கும்படியாக, பலியை நமக்காக கொடுத்தார். (யோ 1:29) அதுமட்டுமல்லாமல், நமக்கொரு வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார், "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (அப். 2:21). கெட்ட குமாரன் உவமையில் மனந்திரும்புதலைக் குறித்தும், மன்னிப்பைக் குறித்தும், அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. (லூக். 15:11-32) இளையகுமாரன், வெட்கப்படத்தக்க பாவங்களில் தகப்பனாரின் ஆஸ்தியை அழித்துப் போட்டான். தன் தவறை அவன் உணர்ந்து கொண்டபொழுது, தன் வீட்டிற்குத் திரும்பி வர தீர்மானித்தான் (வ.18) இனி, தான் மகனாக இருக்க முடியாது என்று அவனாகவே தவறாக நிச்சயித்தான். தகப்பனார் முன்பு அன்பு கூர்ந்ததைக் காட்டிலும், திரும்பி வந்த தன் மகன் மீது அதிகமாய் அன்பு கூர்ந்தார். எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டது. பெரிய களிகூறுதல் உண்டாயிற்று (வ.24). தேவன் தனது வாக்குத் தத்தங்களை நிறைவேற்றுவதற்கு நல்லவராகவே இருக்கிறார். மன்னிப்பைக் குறித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங். 34:18). தேவனோடு ஒப்புரவாக வேண்டுமெனில் ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். இந்த ஜெபமோ மற்ற ஜெபமோ உன்னை இரட்சிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மாத்திரமே பாவத்திலிருந்து இரட்சிப்பைக் கொண்டுவரும். இந்த ஜெபமானது தேவனிடத்தில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்புக்கு நன்றி செலுத்துவதற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. "தேவனே உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன். நான் தண்டனைக்குறியவன் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனையை, இயேசு கிறிஸ்து தம் மேலே ஏற்றுக்கொண்டார். ஆகவே நான் மன்னிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன் என இரட்சிப்புக்காக உம்மையே விசுவாசிக்கிறேன். உம்முடைய ஆச்சரியமான கிருபைக்காக, மன்னிப்புக்காக, ஈவாகிய அந்த நித்திய ஜீவனுக்காக, நன்றி சொல்கிறேன்.